பணி நேரத்தில் கிரிக்கெட் 'கமென்டரி' கேட்டால் வேலையை விட்டு நீக்கலாம்'
புதுடில்லி : "இந்தியா, கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் உள்ள நாடாக இருக்கலாம். அதற்காக, பணி நேரத்தின் போது, ரேடியோவில் கிரிக்கெட் நேர்முக வர்ணனையை கேட்பது என்பது சரியான நடவடிக்கை அல்ல. இது கடமையை தட்டிக் கழிக்கும் செயல். இதற்காக, வேலையை விட்டு நீக்குவது சரியான நடவடிக்கையே' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
ரயில்வே பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிளாக பணியாற்றியவர் சாய்பாபு. பணி நேரத்தின்போது, ரேடியோவில் கிரிக்கெட் போட்டியின் நேர்முக வர்ணனையை கேட்டுக் கொண்டிருந்ததாக இவர் மீது, சில ஆண்டுகளுக்கு முன் புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள், கடமையில் இருந்து தவறிய குற்றத்துக்காக அவரை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்தனர். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி ஜெயின் தலைமையிலான பெஞ்ச் முன், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது சாய்பாபு சார்பில் ஆஜரான வக்கீல் தனது வாதத்தின்போது கூறியதாவது: கிரிக்கெட் நேர்முக வர்ணனையை கேட்ட குற்றத்துக்காக, பணி நீக்கம் செய்வது என்பது அதிகபட்ச தண்டனை. இந்தியா, கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் உள்ள நாடு. கிரிக்கெட் வர்ணனையை கேட்டதை தவிர, வேறு எந்த குற்றத்தையும் என் கட்சிக் காரர் செய்யவில்லை. இந்தியாவை பொறுத்தவரை, வக்கீல்கள், நீதிபதிகள் உள்ளிட்டோர் கூட, கிரிக்கெட் நேர்முக வர்ணனையையும், "டிவி'யில் இது தொடர்பான ஒளிபரப்பையும் பார்க் கின்றனர். மேலும், என் கட்சிக்காரரின் மனைவி, ரயில்வே பாதுகாப்பு படையில் உள்ள ஒரு அதிகாரிக்கு எதிராக புகார் கொடுத்துள் ளார். இந்த காரணத்துக்காகவே, பழிவாங்கும் நோக்கத்துடன் சாய்பாபுவை வேலையை விட்டு நீக்கியுள்ளனர். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த வக்கீல் வாதிட்டார்.
இதையடுத்து, சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில் கூறியதாவது: இந்தியா, கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் உள்ள நாடாக இருக்கலாம். அதற்காக, பணி நேரத்தில் கிரிக்கெட் நேர்முக வர்ணனையை கேட்கலாம் என, கருதக் கூடாது. நேர்முக வர்ணனையை கேட்ட குற்றத்துக்காக, பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்தது அதிகபட்ச தண்டனை என, கூறுவதை ஏற்க முடியாது. சாய்பாபு, கடமையை தட்டிக் கழிக்கும் பழக்கம் உடையவர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. மேலும், ரயில்வே பாதுகாப்பு படையில் உள்ள அதிகாரிக்கு எதிராக, தனது மனைவியை தூண்டி விட்டு, பொய்யான புகார் கொடுத்துள்ளார். எனவே, அவரை பணியில் இருந்து நீக்கியது சரியான நடவடிக்கையே. இவ்வாறு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.
No comments:
Post a Comment